எடையை குறைக்க எளிய வழிகள்



உங்கள் உடலின் எடை ஒரே நாளில் அதிகரித்து விடவில்லை. அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அப்படிக் குறைப்பதுதான் ஆபத்தில்லாதது. உடல் எடைக்கும் சர்க்கரை நோய், இதயநோய், ரத்தம் அழுத்தம் போன்ற நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் எடை விஷயத்தில் எச்சரிக்கை தேவை.


முன்பு, கொழுப்பு அதிகமுள்ள நெய், எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதுதான் எடை கூட காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால், இப்போது கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. எடையைக் குறைக்க விரும்புவர்கள் சாப்பாட்டில் கார்போஹைட்ரேட்டையும், கொழுப்பையும் குறைத்துவிட்டு புரோட்டினைக் கூட்டினால் எடை தானாகவே குறையும்.


அரிசி உணவில்தான் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. அரிசியில் செய்த இட்லி, தோசை, வடை என்று எல்லாப்பொருட்களிலும் கார்போஹைட்ரேட் அதிகம்தான். உருளை,ரொட்டி ஆகியவற்றிலும் கார்போஹைட்ரேட் அதிகம்தான். கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரியிலும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. ஆனால், அரிசியை விட, கோதுமையில் குறைவு.


கார்போஹைட்ரேட்டில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகம். அதைச் சாப்பிட்டவுடன் நம் உடலின் குளுக்கோஸின் அளவு அதிகமாகிவிடும். குளுக்கோஸ் அதிகமானவுடன் இன்சுலின் சுரக்கும் அளவும் அதிகமாகிவிடும். இன்சுலின் அளவு அதிகமானவுடன் குளுக்கோஸின் அளவு உடனே விழுந்து விடும். இதனால் இரண்டு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்துவிடும். அதனால் திரும்பவும் சாப்பிடுவோம். இதனால் எடை கூடுவது தவிர்க்க முடியாது.


அதனால் அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குறைத்துக்கொண்டு, காய்கறிகளில் சமைத்த கூட்டு, அவியல் கீரைகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகளில் புரோட்டின் அதிகம். எனவே, எடையைக் குறைக்க விரும்புவர்கள் 50 சதம் காய்கறியும், 50 சதம் சாதமும்தான் இனி சாப்பிட வேண்டும். அசைவத்தில் மீன் நல்லது.


01. உப்பை அளவோடு சாப்பிடுங்கள். சாப்பாட்டில் உப்பின் அளவு கூடினால் உடல் உப்பிப் போகும்.

02. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிடுவதைக் குறையுங்கள்.

03. பசிக்காவிட்டால் யார் வற்புறுத்தினாலும் சாப்பிடவே சாப்பிடாதீர்கள்.

04. சுவை கருதி எந்த உணவையும் அதிகமாக சாப்பிட்டு விடாதீர்கள். அளவு முக்கியம்.

05. நொறுக்குத் தீனி கூடவே கூடாது.

06. கொழுப்புச் சத்துள்ள எந்த <உணவாக இருந்தாலும் தவிர்த்து விடுங்கள்.

07. மோர், குளிர்ந்த நீர் சாப்பிடுங்கள்.

08. பட்டினி கிடக்காதீர்கள். அதனால், உடல் எடை குறையாது. மாறாக உடல்நலக் கேடுகள் உருவாகும்.

09. உடற்பயிற்சி தவறாமல் செய்யுங்கள்.

10. தினமும் குறைந்தது 4 கிமீட்டராவது தொடர்ந்து நடந்தாக வேண்டும்.

11. எடை கூடி விட்டதே என்று கவலைப்படுவதை விட்டுவிடுங்கள்.
Powered by Blogger.