சர்க்கரை நோயால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு


சர்க்கரை நோயாளிகளின் உலகத் தலைநகரம்’ என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய ‘சர்வே’, நம் நாட்டில் கிட்டத்தட்ட 8 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.


சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், உடலில் அடுத்தடுத்து பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். அதில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்:-

மனித உடல் இயக்கத்திற்கு மிக முக்கியமானது இன்சுலின். இதுதான் ரத்தத்தில் கலந்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நமது உடல் சீராக இயங்க துணைபுரிகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இன்சுலினை, கணையம் என்ற உறுப்பு சுரக்கிறது.

இது, சிறுகுடல் சுற்றப்பட்ட நிலையில், நமது மேல் வயிற்றின் பின் பகுதியில் அமைந்துள்ளது. கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வரும். நமது உடலில் இன்சுலின் நன்றாக வேலை செய்ய, ‘ரிசெப்ட்ராஸ்’ என்ற கொழுப்பு திசுவின் உதவி தேவைப்படும்.

உடல் குண்டாக இருந்தாலோ, உடற்பயிற்சியே செய்யாமல் இருந்தாலோ ரிசெப்ட்ராஸ் சரிவர வேலை செய்யாது. அப்போது கணையம் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அது பயன்பாட்டிற்கு வராது. அதனால் காலப் போக்கில் இன்சுலின் சுரப்பதை கணையம் குறைத்துவிடும். அத னாலும் சர்க்கரை நோய் தோன்றும்.

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்கள் சமச்சீரில்லாமல் போனாலும், கிட்னியின் மேல் பகுதியில் இருக்கும் ‘அட்டிரினல்’ சுரப்பி அதிகம் சுரந்தாலும், மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ‘குரோத் ஹார்மோன்’ அதிகம் சுரந்தாலும் சர்க்கரை நோய் தோன்றும். சர்க்கரை நம் உடலில் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

அதன் அளவு அதிகரிக்கும்போதுதான் அது சர்க்கரை நோயாகமாறும். பிறந்த குழந்தையில் இருந்து 20 வயதுக்குள் பாதிக்கப்படுகிறவர்களை ‘டைப்-1’ நோயாளிகள் என்றும், இருபது வயதுக்கு மேல் பாதிக்கப்படுகிறவர்களை ‘டைப்-2’ நோயாளிகள் என்றும் அழைக்கிறோம்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உச்சி (முடி உதிர்வது) முதல் பாதம் (புண் ஏற்படுவது) வரை பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், கண்களில் ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவை:

* கண்ணீர் ஓட்டம் குறைந்து கண்கள் உலர்தல்.
* கண்புரை (கேட்ராக்ட்) உருவாகுதல்.
* ‘க்ளாக்கோமா’ என்ற கண்நரம்பு அழுத்த பாதிப்பு தோன்றுதல்.
* விழித்திரை பாதிப்பு.
* விழித்திரையில் இருக்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுதல்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு ‘டயாபட்டிக் ரெட்டினோபதி’ எனப்படும் விழித்திரை கோளாறு தோன்றுகிறது. அதில் பெரும்பாலானவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது. விழித்திரை பாதிப்பு எப்படி ஏற்படுகிறது? சர்க்கரை நோய் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் ரத்த ஓட்டம் குறையும்.

அப்போது விழித்திரைக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் பலகீனமாகி, ரத்தத்தில் இருக்கும் நீர் கசிந்து வெளியேறி, திசுக்களில் கலந்து சொதசொதப்பாக ஆகிவிடும். சிலருக்கு ரத்தமும் கசிந்து வெளியேறும். அதன் ஆரம்பநிலையில் நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் தெரியாது.

கண் பார்வையும் மங்காது. வழக்கமான கண் பரிசோதனைக்கு சர்க்கரை நோயாளிகள் செல்லும்போது அவர்களுக்கு ‘இன்டைரக்ட் ஆப்தமோல்ஸ்கோபி’ பரிசோதனை செய்தால், தொடக்கத்திலே பாதிப்பை கண்டறிந்துவிடலாம். முதலிலே கண்டறிந்தால் சிகிச்சை எளிது.

விழித்திரை நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, ரத்தக் குழாய்கள் உடைந்து கண்களுக்குள்ளே ரத்தம் சிதறி, பார்வை மங்கிய பின்பு வந்தால் அது நோயாளிகளுக்கு சிரமமான சிகிச்சையாகிவிடும். டைப்-1 நோயாளிகள் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டு ஒருசில வருடங்கள் கழித்து கண்களை பரிசோதிக்கலாம்.

டைப்-2 நோயாளிகள் எப்போது சர்க்கரை நோய் கண்டறியப்படுகிறதோ அப்போதிருந்து கண் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும். விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்டறிய ‘பண்டஸ் ப்ளோரெசின் ஆஞ்சியோகிராபி’ என்ற பரிசோதனை உள்ளது. ப்ளோரெசின் என்ற ‘டை’யை கை நரம்பில் செலுத்தவேண்டும்.

அது விழித்திரை நரம்புகளை சென்றடையும். அதன் மூலம் விழித்திரை நரம்புகள் எப்படி இயங்குகின்றன? அவைகளில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது? எங்கெங்கு அடைப்பு, கசிவு இருக்கிறது என்பதை எல்லாம் கண்டுபிடித்துவிடலாம். ‘ஓ.சி.டி’ ( Optical Coherence Tomography) என்று அழைக்கப்படும் ‘ஆப்டிகல் கோகரன்ஸ் டோமோகிராபி’ பரிசோதனை.

இதை பயன்படுத்தி கண்களைத் தொடாமலே திசுக்களின் மாதிரியை சேகரித்துவிடலாம். லேசர் கதிர்களை அடிப்படையாகக்கொண்டு இந்த பரிசோதனை நடக்கும். இது விழித்திரை நரம்புகளின் அடர்த்தியை பலவிதங்களில் ஆய்வு செய்து, பாதிப்பை படங்களாக்கிதரும். அடுத்து ‘பி ஸ்கேன்’ (B Scan). அல்ட்ரா சவுண்ட் அலைகளை செலுத்தி விழித்திரை ஒட்டியிருக்கிறதா? பிரிந்திருக்கிறதா? என்று கண்டுபிடிக்கும் பரிசோதனை இதுவாகும்.

மேற்கண்ட பரிசோதனைகளை செய்து, பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிந்த பின்பு அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளவேண்டும். விழித்திரை ரத்தக்குழாய்களில் இருந்து நீரோ, ரத்தமோ கசிந்திருந்தால் லேசர் சிகிச்சை மூலம் அதை உலர வைத்துவிடலாம்.

சில நிமிடங்களில் இந்த சிகிச்சை முடிந்துவிடும். பச்சை நிற கதிர்கள் லேசர் மூலம் பாயும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியாக கணித்து, அதில் சரியான முறையில், தேவைப்படும் இடை வெளியில் லேசர் கதிர்களை பாய்ச்சுவது இந்த சிகிச்சையின் சிறப்பம்சமாகும்.

உலரவைப்பதற்கு பதில் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையையும் டைப்-1 நோயாளிகள், சர்க்கரை நோய் கண்டறியப் விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில் கண்ட கண்களுக்கு எடுக்கப்படும் சி.டி.ஸ்கேன் போன்றது விழித்திரையில் மேற்கொள்ளலாம். நீரோ, ரத்தமோ கசிந்திருக்கும் பகுதியை கண்டறிந்து, அதற்குரிய மருந்தை செலுத்தி, நவீன ஊசியை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்கவேண்டும்.

கசிந்த ரத்தம் விழித்திரையில் உறைந்து கட்டிபோல் ஆகியிருந்தால் அதை ஆபரேஷன் மூலம் அகற்றவேண்டும். இதற்கான அறுவை சிகிச்சைக்கு ‘விட்ரெக்டமி’ என்று பெயர். விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உலரவைத்தல், உறிஞ்சி எடுத்தல், ஆபரேஷன் செய்தல் ஆகிய மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், விழித்திரை என்பது வளரும் தன்மை கொண்டது அல்ல. விழித்திரையில் இருக்கும் ஒரு திசு இறந்துபோனால் கூட அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது.

அதனால் சர்க்கரை நோயாளிகள் விழித்திரை தொடர்புடைய பரிசோதனைகளை தவறாமல் செய்து, பாதிப்பு இருப்பின் உடனே சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள் கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யவேண்டும்.

முறைப்படுத்தப்பட்ட பயிற்சிகளை செய்ய வாய்ப்பு இல்லாவிட்டாலும், தினமும் 40 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவுப் பழக்கம், மனஅழுத்தம் இல்லாத வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திடுங்கள். கண்களையும் பாதுகாத்திடுங்கள்.

நன்றி
கண்விழித்திரை சிகிச்சை நிபுணர், சென்னை

- கட்டுரை : டாக்டர் வசுமதி வேதாந்தம், M.S.,DNB.FRCS.,
கண் விழித்திரை சிகிச்சை நிபுணர்,
சென்னை - 17

Powered by Blogger.